×

ரூ.30 லட்சத்துக்கு மேல் உள்ள பதிவுக்கு கணக்கு இல்லாததால் செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஐடி ரெய்டு: முறைகேடு நபர்களின் முக்கிய ஆவணம் சிக்கியது

சென்னை: ரூ.30 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட பத்திரப்பதிவுகளுக்கு முறையாக கணக்கு காட்டப்படவில்லை என்று சென்னை செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த நபர்களின் முக்கிய ஆவணங்கள் சில சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 583 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அதில் 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் முறையாக நிதி பரிவர்த்தனை அறிக்கையை வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யவில்லை என வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் கணக்கு காட்டாத சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனையை தொடங்கி உள்ளனர்.

பொதுவாக சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை கொண்ட பத்திரப்பதிவுகளை முறையாக கணக்கு காட்டப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில், பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமலேயே பத்திரப்பதிவுகள் நிகழ்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் பெருந்தொகை பணப்பரிவர்த்தனையில், நில பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும், அது குறித்து நிதி பரிவர்த்தனை அறிக்கையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் கணக்கு காட்டவில்லை என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் முதற்கட்டமாக வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் யாரையும் அதிகாரிகள் வெளியே அனுப்பவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த நிதி பரிவர்த்தனை அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் நில பத்திரப்பதிவு செய்த நபர்களின், தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கலில் ஒப்பிட்டுப் பார்த்து, முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளதா என நேற்று நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். அப்போது முறையாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல் சொத்துக்களை சேர்த்து, வரி ஏய்ப்பு செய்த நபர்களின் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை தொடரும் எனவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். பல சார்பதிவாளர் அலுவலகங்களில் முறையாக கணக்கு காட்டாமல் சொத்துக்களை வாங்கி, வரி ஏய்ப்பு செய்த நபர்கள் இந்த சோதனையின் முடிவில் சிக்குவார்கள் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ரூ.30 லட்சத்துக்கு மேல் உள்ள பதிவுக்கு கணக்கு இல்லாததால் செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஐடி ரெய்டு: முறைகேடு நபர்களின் முக்கிய ஆவணம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Senggunram ,Varayur ,CHENNAI ,Trichy ,Sengunram ,Vrayyur ,Dinakaran ,
× RELATED சிக்கன் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது